பகுதி
– 1
செய்யுள்
பகுதி
இக்காலக்
கவிதைகள்
1.
பகைவனுக்கு
அருள்வாய் - பாரதியார்
2.
தமிழின்
இனிமை -
பாரதிதாசன்
3.
பிதிரப்பறவை - ஈரோடு தமிழன்பன்
4.
காகிதப் பூக்கள் -
நா. காமராசன்
5.
ஒரு கிராமத்துக்
கிரிக்கெட் - நா. முத்துக்குமார்
6.
யுத்தகால
இரவொன்றின் நெருக்குதல் - சிவரமணி
7.
மெல்லச்
சாகுமோ மலைக்காடுகளும் - வைகைச்செல்வி
(இதில்
அப்துல் ரகுமானின் கொம்பு கவிதைக்கும்
கவிஞர் மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் கவிதைக்கும் மட்டும்
விளக்கம் இல்லை. )
(இந்தக் கவிதைகளின் நூல் குறிப்பு மற்றும் ஆசிரியர் குறிப்பை உங்கள்
செய்யுள் புத்தகங்களில் படித்துக்கொள்க)
1. பகைவனுக்கு
அருள்வாய் - பாரதியார்
பகைவனுக்கு
அருள்வாய் என்ற பாடலில் பாரதியார் தன் நெஞ்சிடம் பகைவனுக்கு அருள் செய்ய வேண்டும்
என்ற உயர்ந்த பண்பை வேண்டிப் பாடுகின்றார். இப்பாடலில் ஒவ்வொரு இரண்டு வரிகளுக்கு
இடையிலும் நன்னெஞ்சே என்று கூறிப் போற்றியுள்ளார்.
புகை – தீ
புகை
நடுவினில் தீ இருப்பது போன்று பகைவர்கள் மத்தியிலேதான் அன்பே உருவான நம் பரமனான
இறைவன் வாழ்கின்றான். இது தான் உலகத்தின் இயற்கை. எனவே நன்னெஞ்சே பகைவனுக்கு அருள்
செய்வாயாக.
சிப்பி –
முத்து
அருவருப்பாக
இருக்கும் சிப்பியினுள் விலை உயர்ந்த ஒளி தரக்கூடிய முத்து விளைகின்றது. குப்பை
மேட்டினில் தான் அழகான பூக்கள் தரக்கூடிய குருக்கத்தி கொடி வளர்கின்றது. அருவருப் பானவை
என்பதில் இருந்து தான் அழகான பொருட்கள் விளைகின்றன. இது ஒரு முரண். எனவே நன்னெஞ்சே
பகைவனுக்கு அருள் செய்வாயாக.
தேன் –
நஞ்சு
தெளிவான
தேனில் சிறிது நஞ்சு கலந்தாலும் அந்தத் தேன் முழுவதும் நஞ்சாக மாறுவது போன்று
நிறைவான உள்ளத்தில் சிறிதளவு கள்ளம் புகுந்தாலும் அவ்வுள்ளம் கள்ளத்தனம்
நிறைந்ததாக மாறிவிடும். எனவே பகைவனால்
துன்பமடைந்த போதும் நன்னெஞ்சே அவனிடத்தும் அன்பு செய்தல் வேண்டும்.
பிறர் வாழ
நினைத்தல் வேண்டும்
ஒருவன்
தான் வாழ நினைத்த பிறகு தாழ்வை நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால் அது அவன்
வாழ்வை கீழிறக்கி விடும். தன் வாழ்க்கையிலேயே தாழ்வை நினைப்பவனுக்கு அழிவு
வரும்போது, அடுத்தவர்கள் தாழ்ந்து போகவேண்டும் என்று நினைப்பவனின் வாழ்வு
முற்றிலுமாக அழிந்துபோய்விடும் என்பதையே சாத்திரங்கள் கூறுவதாகப் பாரதியார்
சுட்டிக்காட்டுகின்றார்.
பாரதத்தில்
கண்ணன் செயல்
மகாபாரதப்
போரில் கண்ணன் பாண்டவர்களிடம் கெளரவர்கள் சார்பில் வருபவன் போல வந்தான். ஆனால்
போர் செய்யும் போது அர்ஜூனன் தேருக்கு தேரோட்டியாகச் செயல்பட்டான். கடவுள்
அவதாரமாகிய கண்ணன் இப்படி செயல்பட்டது முரண் இல்லையா? அதனால் நெஞ்சமே யாரையும் நீ
பகைவராக எண்ணாதே. அவர்களுக்கும் அருள் செய்வாயாக.
புலியே பராசக்தியாக
நெஞ்சமே
உன்னைத் தின்ன வரும்புலியை அன்புடன் பார்த்து நினைவிலேயே போற்றுவாயாக. அப்படிப்
போற்றினால் அந்தப் புலி அன்னையின் வடிவமான பராசக்தி வடிவில் தெரியும். அவளைக்
கும்பிடுவாய். எனவே நன்னெஞ்சே பகைவனுக்கு அருள்செய்வாயாக.
முடிவுரை:
பகைவனுக்கு
அருள்வாய் என்ற கவிதையின் வழி பாரதியார் நல்ல உள்ளத்திடம் வாழ்க்கையின் பல்வேறு
முரண்களைச் சுட்டிக்காட்டிப் பகைவனுக்கும் அருள்செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக்
கூறியுள்ளார்.
2. தமிழின்
இனிமை - பாரதிதாசன்
உலகத்தில்
எல்லாவற்றையும் விட தமிழ் எவ்வளவு இனிமையானது என்பதைப் பாரதிதாசன் இக்கவிதையில்
விளக்கிச் சென்றுள்ளார்.
சுவையும்
தமிழும்
கனியில்
உள்ள சுவை, கரும்பில் உள்ள சாறு, மலரில் உள்ள தேன், காய்ச்சிய வெள்ளப்பாகில் உள்ள
சுவை, பசுவில் இருந்து கிடைக்கும் பால், தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர்
இவையாவும் இனிமையானவை என்றாலும் தமிழ்மொழி என்னுயிர் போன்றது என்பேன் என்று கவிஞர்
பாரதிதாசன் கூறுகின்றார்.
இசையும்
தமிழும்
மலர்கள்
நிறைந்த தோட்டத்தில் கேட்கும் வண்டின் ஒலி, ஓடை நீரின் ஓசை, இனிய புல்லாங்குழலின்
இசை, வீணையின் இனிய நாதம், குழந்தையின் அழகிய மழலைப் பேச்சு, கொஞ்சிடும் பெண்களின்
இதழின் வாய்ப்பு இவை யாவும் சிறந்தவை என்றாலும் தமிழும் நானும் உடலும்
உயிருமாய் இணைந்திருக்கின்றோம் என்று
கவிஞர் கூறுகின்றார்.
உறவும்
தமிழும்
பழகிடும்
அண்ணன் தம்பி, அண்டை வீட்டாரின் அன்பு, கருணை அதிகம் உடைய அன்னை மற்றும்
என்றென்றும் மறவாத தந்தை, குயில்போல் பேசிடும் மனைவி, அன்பைக் கொட்டி வளர்க்கும்
பிள்ளை என இவ்வுறவுகள் அனைத்தும் அயலவர் என நினைக்குமளவிற்குத் தமிழ் என் அறிவினில் உறைந்துள்ளது எனவும் கவிஞர்
கூறுகின்றார்.
இயற்கையும்
தமிழின் விந்தையும்
நீலம்
படர்ந்த வானம், குளிர்ந்த வெண்ணிலவு, காலையில் எழும் சூரியன், அதனால் கடலில்
பரவும் வெளிச்சம், மாலையில் சூரியன் மறையும் போது தெரியும் மலையின் அழகு, இவை
அனைத்தும் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் சிறந்தது என்பதை எழுதும் கவிஞர்கள்
தமிழின் விந்தையை எழுதிவிட முடியுமோ? என்ற வினாவை முன்வைக்கின்றார் கவிஞர்.
உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!
செந்நெல்
சோறு, பசு நெய் கலந்த கறிவகை, தானிய முதிரை, கட்டித் தயிர், மிளகின் சாறு, சுவை
மிகுந்த கிழங்கு, நாவில் இனித்திடும் அப்பம் இவை யாவும் நம் உடலை மட்டுமே வளர்க்க
உதவுகின்றன. ஆனால் நம் உயிரையும் உணர்வையும் வளர்ப்பது தமிழ் ஒன்றுதான் என்பதைத்
தமிழின் இனிமை என்னும் இக்கவிதையில் கவிஞர் பாரதிதாசன் வலியுறுத்திக்
கூறியுள்ளார்.
3. பிதிரப்பறவை -
ஈரோடு தமிழன்பன்
காகங்களை
நம் முன்னோர்களாகிய பிதிரர்களாகக் கற்பனை செய்து எழுதப்பட்ட கவிதை.
வருணனைகளைத்
தூரத்தில் நிறுத்தும் வடிவம்
காகங்களைப்
பற்றி எனக்கு நன்கு தெரியும். நான் வசிக்கும் இடத்தில் நெருக்க மாகவும், அவற்றின்
குரல் சங்கீதத்தோடு சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். அவற்றின் உருவம் வர்ணிக்க
முடியாத தன்மையில் இருக்கும். அவை பார்ப்பதற்கு நம் தேசத்தின் ஆன்மா போல் இருண்டு
கிடப்பது போல கிடக்கும் என்று கவிஞர் காக்கைகளை வர்ணிக்கின்றார்.
காக்கைகளும் உருவகங்களும்
காக்கைகளின்
கருமை நிறம் இரவின் நிறத்தை கிழித்து அணிந்துகொண்டது போல் இருக்கும். இந்தக்
காக்கைகளுக்குச் சிறகுகள் முளைப்பதற்கு முன் எங்கிருந்திருக்கும்? என்ற கேள்வியை
எழுப்பிய கவிஞர் அவை முடிவு செய்யப்படாத மரணங்களில் எழுதப்படாத கவிதைகளில்
இருக்கும் என்று விடை தருகின்றார்.
நீ கூட என்னைப் போல் ஒரு நிழல்தான்
காக்கைகள்
யாருடைய எதனுடைய நிழல்களாக உள்ளன? எவ்வளவு காலம் உண்மைகளைத் தேடி இப்படிப்
பறந்துகொண்டே இருக்கும் என்ற கேள்வியை கவிஞர் முன்வைக்கின்றார். அப்போது ஒரு காகம்
அவரைப் பார்த்து நீ கூட என்னைப் போல் ஒரு நிழல்தான் என்று கூறிச் செல்கிறது.
அதற்கு அவர் என் உண்மை நிலையை எங்கே போய்த் தேடுவேன் என்று புலம்புகின்றார்.
பிதிரர்கள்
- ஏன் குயில், கிளி, மைனா ஆகவில்லை?
நம்
முன்னோர்கள் நாம் வைக்கக்கூடிய ஒரு பிடி பிண்டச்சோற்றுக்காகவா இந்தக்
காக்கைகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றார்கள். பிதிரர்கள் அதாவது நம் முன்னோர்கள்
ஏன் குயில் கிளி மைனா ஆகவில்லை? ஏனென்றால் இப்பறவைகளின் உடல் என்னும் கூண்டுக்குள்
அடைபட்டு இன்னொரு கம்பி என்னும் கூண்டுக்குள் அடைபடக் கூடாது என்பதற்காகவே நம்
முன்னோர்கள் அப்பறவைகளாக மாற வில்லை. காகங்களுக்குக் கம்பி கூண்டுகள் என்பது இல்லை
காகமும்
கவிஞரும்
வீட்டின்
கூரைமேல் காகங்களாகிய பிதிரர்கள் சிறகுகள் மடக்கி உட்காரும்போது அங்கே எனக்கு ஓர்
இடத்தை அடையாளப்படுத்தி வைத்தால் பின் வருவோருக்கும் வசதியாக இருக்கும். முடியுமா
என்று காக்கைகளிடம் கவிஞர் கேட்கிறார்.
முடிவுரை
காகத்தின்
நிறம், குரல், உருவம் ஆகியவற்றையும் அவை எவற்றையெல்லாம் பிரதிபலிக் கின்றன
என்பதையும் அக்காகங்களுக்குள் நம் முன்னோர்கள் பிதிரர்களாக இருக்கின்ற
நிலையினையும் எடுத்துரைக்கும் விதமாக கவிஞர் ஈரோடு தமிழன்பனின் பிதிரப்பறவை என்ற
இக்கவிதை அமைகின்றது.
4. காகிதப்
பூக்கள் – நா. காமராசன்
காகிதப்
பூக்கள் என்னும் இக்கவிதை திருநங்கைகளின் பிறப்பு, அவர்கள் இந்த சமூகத்தில் படும்
துன்பங்கள் ஆகியவற்றை எடுத்துரைப்பதாக அமைகின்றது.
சதுராடும் புதிர்கள்
காலம்
என்கிற மழைத்தூறலிலே நாங்கள் நெல்லின் இடையே வளரும் களை களாகப் பிறப்பெடுத்துள்ளோம்.
தாய்ப்பாலின் வரலாற்றிலே ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் சதுரங்க
ஆட்டத்திலே உள்ள புதிராக மாறிப்போனோம் என்று அவர்களது பிறப்பின் வேதனையைக் கவிஞர்
கூறுகின்றார்.
சாவின்
சிரிப்புகள்
விதைவளர்த்த
முள்ளாகவும் விளக்கின் இருளாகவும், சதை வளர்க்கும் பிணங் களாகவும், சாவின்
சிரிப்புகளாகவும் நாங்கள் உள்ளோம். இப்படி எல்லா நிலையிலும் எங்கள் வாழ்க்கை
முரண்பட்டதாகவே காணப்படுகின்றது என்று கூறுவது போன்று கவிஞர் கூறுகின்றார்.
சந்ததிப்
பிழை நாங்கள்
வாய்பேச
இயலாதவர் பாட்டிசைக்க கையில்லாதவர் அதை எழுதிவைக்க கண்பார்வையற்றவர் அதைப்
படித்ததை எங்கேனும் பார்த்ததுண்டா? ஆனால் நாங்கள் வாய்பேச இயலாதவரின் பாட்டானோம்;
கையில்லாதவர் எழுதிய எழுத்தா னோம்; கண்பார்வையற்றோர் அதைப் படிக்கின்றனர். உலகில்
இவையெல்லாம் நடக்காத விஷயங்கள் என்றால் எங்கள் பிறப்பு இவற்றை யெல்லாம் நடந்த
விஷயங் களாக மாற்றுகின்றது.
எழுத்துக்களில்
வரக்கூடிய சந்திப்பிழை போன்று நாங்கள் எங்களின் பரம்பரையில் சந்ததிப் பிழைகளாக
மாறிவிட்டோம். இதை மாற்றக்கூடிய சக்தி எங்களிடம் இல்லை. காலத்தின் பேரேட்டைக் கடவுள்
திருத்தட்டும் என்று கூறுகின்றனர்.
பூவைத்தல்
முறைதானோ?
நாங்கள்
தலைமீது பூ வைப்போம், உலகத்தில் கல்லறை மீது பூ வைப்பது என்பது முறைதானே? எனவே
நாங்கள் பூத்த உயிர் கல்லறைகளாகவே இருக்கின் றோம்.
நாங்கள்
காகிதப் பூக்கள்
குழந்தையைப்
பெற்றெடுக்கக்கூடிய பெண்கள் அழகும் வாசமும் நிறைந்த தலையில் சூடக்கூடிய
முல்லைப்பூவாகக் கருதப்படுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத மலடி என்று
அழைக்கப்படும் பெண்கள் வாசம் உடைய ஆனால் தலையில் சூட இயலாத தாழம்பூவாகக்
கருதப்படுகின்றனர்.
ஆனால் ஆணாக
இருந்து பெண்ணாக மாறிய நாங்கள் என்னதான் பெண் பெண் என்று கூறினாலும், பார்ப்பதற்கு
பூ போன்று இருந்தும் பூக்குரிய எந்தத் தகுதியும் இல்லாத காகிதப் பூக்களாகவே
கருதப்படுகின்றோம்.
7. ஒரு கிராமத்துக் கிரிக்கெட் - நா.
முத்துக்குமார்
இக்கவிதை
பட்டாம்பூச்சி விற்பவன் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
விதிகள்
எதுவும் யாருக்கும் தெரியாது
கிராமத்தில்
சிறுவர்களால் விளையாடப்படும் கிரிக்கெட் விளையாட்டு எவ்வாறு இருக்கும் என்பதை
இக்கவிதை முதலில் நம்முன் வைக்கின்றது.
தென்னை
மட்டையால் செய்த பேட், சைக்கிள் டியூபால் செய்த பந்து, ஆடாதொடை குச்சியால்
செய்யப்பட்ட ஸ்டெம்பு இவைதான் கிராமத்துச் சிறுவர்களின் கிரிக்கெட் விளையாட்டுப்
பொருட்கள். கிரிக்கெட் விதிகள் எதுவும் இவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்குத்
தெரிந்ததெல்லாம் பந்து, மட்டையில் பட்டால் ரன், ஸ்டெம்பு குச்சியில் பட்டால் அவுட்
என்பது மட்டும்தான்.
கிராமத்தில்
கிரிக்கெட் விளையாடப்படும் இடம் பெரும்பாலும் நாயக்கருக்குச் சொந்தமான தாகவும்,
கிரிக்கெட் விளையாட்டின் போது அடிக்கப்படும் பந்து அவரின் தோட்டத்துக் கிணற்றில் அவ்வப்போது
சிறைப்படுவதாகவும் கிராமத்துக் கிரிக்கெட் பற்றி நமக்கு அறிமுகம் செய்கிறார்
கவிஞர்.
பள்ளியில்
படிப்பதால் விசேஷ கவனிப்பெனக்கு
ஒரு
கிராமத்துக் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சிறுவர்களுள் ஒருவராக தன்னை அறிமுகம்
செய்து கொள்கின்றார் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள். தன்னுடன் விளையாடுபவர்கள்
தான் பள்ளியில் படிப்பதால் தனக்கு எல்லாம் தெரியும் என எல்லோரும் நினைத்ததுண்டு.
ஆனால் தனக்கு ரொம்பநாள் வரை கவாஸ்கருக்கும் கபில்தேவுக்கும் கூட வித்தியாசம்
தெரியாது என்பதை வெளிப்படையாக இக்கவிதையில் கவிஞர் பகிர்ந்து கொள்கின்றார்.
கிரிக்கெட்
- கிராமம்/ நகரம்
கிராமத்துக்
கிரிக்கெட் விளையாட்டில் ஸ்டாராக இருந்த கவிஞர் மேற்படிப்பு காரணமாக நகரத்தில்
வாழப் பழகியபோது ஆர்வத்தின் பொருட்டு கிரிக்கெட் விளையாடுகையில் ஸ்லிப்பு கூட தெரியலையா?
நீயெல்லாம் பந்து பொறுக்கக் கூட லாயக்கு இல்லை என்று சக மாணவர்களின் கேலிகளுக்கு
ஆளாகின்றார். இதனால் தனக்கு கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தை முற்றிலும்
விட்டுவிட்டதைக் கவிஞர் இக்கவிதையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தித்தாள்
படிக்கையில் மகிழ்வதோடு சரி
நகரத்தில்
மேற்படிப்பின் போது சக மாணவர்களின் கேலியால் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து
ஒதுங்கிய கவிஞர், செய்தித்தாள் படிக்கும்போது ஆட்சி கலைப்பது உறுதி – சு. சுவாமி
பேட்டி, அண்ணியுடன் தொடர்பு - தம்பி படுகொலை என்ற செய்திகளுக்கிடையே கிரிக்கெட்
போட்டியில் இந்தியா வெற்றி எனப் படிக்கும் போது புன்னகைப்பதோடு மட்டும்
சென்றுவிடுகின்றார்.
8.
யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் - சிவரமணி
இலங்கையைச்
சார்ந்த கவிஞர் சிவரமணி அவர்கள் அங்கு நடைபெற்ற போரில் அங்குள்ள குழந்தைகள்
மனரீதியாக எவ்வாறு வளர்ந்தவளாக மாறுகின்றனர் என்பதை எடுத்துரைப்பதாக இக்கவிதையை
அமைத்துள்ளார்.
சிறுவர்கள் சிறுவர்களாக இல்லாமல்
போர்க்கால
நெருக்குதலால் எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களாக இல்லாமல் போய்விட்டனர். அதற்குக்
காரணம் காலைப் பொழுதில் அவர்கள் செல்லும்
வழியில் வீசப்படும் தலையில்லாத இரத்தம் வழியும் மனித உடல்கள் அவர்களின் சிரிப்பின்
மீது உடைந்துவிழும் மதிற்சுவர்கள் போன்று இருப்பதாலே ஆகும்.
துப்பாக்கிச் சத்தம்
வானத்தில்
நட்சத்திரம் இருக்கக்கூடிய ஒரு இரவில் குழந்தைகள் பெரியவர்களிடம் கதை கேட்டுக்
கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த அமைதியை உடைத்தெறிந்த ஒரு துப்பாக்கிச் சத்தம்
அக்குழந்தைகள் கேட்டுக்கொண்டிருந்த கதைகளின் அர்த்தங்களை ஒன்றும் இல்லாமல்
ஆக்கியது.
மறந்து போன விளையாட்டு
சிறிய
பகல் நேரத்தில் எங்கள் குழந்தைகள் ஊமங்கொட்டையில் தேர்செய்வது, கில்லி
விளையாட்டுவது போன்ற விளையாட்டுக்களை விளையாடுவர். இப்போது அவ்விளையாட்டுக்களை
மறந்தே போய்விட்டனர்.
மந்தைகளாக பழகிக் கொண்டனர்
மாலைப்பொழுது
வந்தவுடன் வீட்டின் கதவை மூடிக்கொள்ளவும், நாயின் குரைப்பில் வித்தியாசம்
தெரிந்தால் அதை வைத்து யார் வருகிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும், யாரேனும்
வீட்டிற்கு வந்தால் கேள்வி கேட்காமல் இருக்கவும், கேள்வி கேட்டால் பதில் இல்லாத
போது அமைதியாக இருக்கவும் மந்தைகள் போல எல்லாவற்றையும் பழகிக் கொண்டனர்.
தும்பி
இறக்கை பிய்ப்பது
இப்போதெல்லாம்
எங்கள் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு என்பது தும்பியின் இறக்கையைப் பிய்த்துப்
போடுவது, தடியையும் நீண்ட குச்சியையும் துப்பாக்கியாக கொண்டு தமது நண்பனை எதிரியாக நிற்கவைத்து அவனைச் சுடுவது போன்ற
விளையாட்டுக்களையே விளையாடுகின்றனர்.
முடிவுரை
இதனாலேயே
போர்க்கால இரவொன்று தரக்கூடிய நெருக்குதல்களால் எங்கள் குழந்தைகள் மனதளவில்
வளர்ந்தவர்களாக மாறிப்போயினர் என்று கவிஞர் சிவரமணி தம் கவிதையில்
பதிவுசெய்கின்றார்.
9. மெல்லச்
சாகுமோ மலைக்காடுகளும் - வைகைச்செல்வி
கவிஞர் வைகைச்செல்வியின் அம்மி என்னும் கவிதைத்
தொகுப்பில் இடம் பெற்றுள்ள மெல்லச் சாகுமோ மலைக்காடுகளும் என்னும் இக்கவிதை மலை களில்
உள்ள காடுகள் அழிவது குறித்தும் அக்காடுகள் அழிவதால் அங்குள்ள உயிரினங்கள் படும்
துன்பங்களையும் கூறுவதாக அமைந்துள்ளது.
ஏலக்காய் வாசந்தான் இழுக்குமோ
மேகத்தை
மழை பெய்வதற்காக மலைகளில் உள்ள அடர்த்தியான மரங்களை
நம்பி கீழே வரும் மேகக்கூட்டங்கள் யூகலிப்டஸ் (தைலமரம்) மரங்களைக் கண்டு சோர்வோடு
கலைந்து போகும். அப்படிப் போகும் போது அம்மலைப் பகுதிகளில் அழகாக வெட்டப்பட்ட
தலைமுடி போல இருக்கும் ஏலக்காய் செடிகள் தான் இம்மேகங்களை மழையாக பொழிய வைக்க
முடியுமோ என்று கவிஞர் கூறுவதிலிருந்து அவற்றால் மழை பெய்ய வைக்க முடியாது என்ப தையே
கூறுகின்றார்.
மலைக்காட்டின்
அழிவு
மலைப்பகுதிகளில் வீடுகளைக் கட்ட மரங்களை
வெட்டுகிறார்கள். இதனால் அதில் உள்ள கூடுகள் அழிகின்றன. மலைகளில் வெட்டப்படுகின்ற
மரங்களைக் கீழே கொண்டு வரும் வாகனங்கள் கீழே உள்ள மனிதர்களை மலைப் பகுதி களுக்கு
கூட்டிச் செல்கின்றன.
பூச்சிகள் வாழும் மலைப் பகுதிகளில் வாகனங்கள்
எப்போதும் புழுதியைக் கிளப்பி சத்தமிட்டபடியே செல்கின்றன. இதனால் அங்கே துள்ளி
குதித்து விளையாடும் விலங்குகள் எங்கே? போய் தூங்கும் என்று கவிஞர் கேள்வி
எழுப்புகின்றார்.
இப்படித்தான் இலைகளாலும் மரங்களாலும் மலைகளைப்
போர்த்தியுள்ள காடுகள் அழிவது தெரிகிறதா என்று கூறுகின்றார்.
காட்டை
அழித்தல் பெரிது இல்லை
தன் வாழ்வின் ஆதாரமான காடுகளை அழித்து வாழும் மனிதனை
உடைகளை இழந்தும் மனிதன் மானத்தோடு வாழ்கின்றான் என்று ஒப்பிடுகின்றார்.
கூடுகளை இழந்து பரிதவிக்கும் பறவைகள் அழும் ஓலம்
சாட்டையடி போல் உங்களுக்குக் கேட்கின்றதா?
நிச்சயம் கேட்காது ஏனென்றால் இங்கே கருவிலேயே
குழந்தைகளை அழித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு காடுகளை அழித்தல் என்பது ஒன்றும்
பெரிது இல்லை.
பகுதி
– 2
செய்யுள்
பகுதி
சிற்றிலக்கியங்கள்
1.
நந்திக் கலம்பகம்
2.
கலிங்கத்துப்பரணி
3.
திருக்குற்றாலக் குறவஞ்சி
(இந்த சிற்றிலக்கியங்களின் நூல் குறிப்பு மற்றும் ஆசிரியர் குறிப்பை உங்கள்
செய்யுள் புத்தகங்களில் படித்துக்கொள்க)
1. நந்திக் கலம்பகம்
1. நந்திக் கலம்பகம்
முன்னுரை :-
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான் கினையும் உணர்த்தி மக்களை நல்வழிப்படுத்தும்
இலக்கியங்கள் பேரிலக்கியங்கள் எனப்படும். உறுதிப்பொருள்கள் நான்கனுள்
ஒன்றோ சிலவோ குறைந்து வந்து கற்பனை, தெய்வப்போற்றல், தனிமனிதப் போற்றல் முதலா னவற்றிற்கு மிகுதியும் இடம் தருவன சிற்றிலக் கியங்கள்.
நூல் குறிப்பு:-
இப்பொழுதுள்ள கலம்பகங்களுக்குள்ளே மிகவும் காலத்தால் முற்பட்டது
நந்திக்கலம்பகமே. இந்நூல் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப் பெற்றதாகும்.
இது கி.பி. 9-ம் நூற்றாண்டின்
இடையிலே பாடப் பெற்றது. இக்கலம்பகம் நந்தி மன்னனது போர்,
வெற்றி , வீரம், கொடை,
கல்வி முதலியவற்றைப் புகழ்ந்து கூறுகின்றது.
கலம்பகத்தின் உறுப்புகள்:
நந்திக்கலம்பகத்தில்
புயம்
,தவம் ,வண்டு, அம்மானை, ஊசல், பாண், மதங்கு, கைக்கிளை, சிந்து, களி, மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, மடக்கு எனும்
18 உறுப்புகள் அமைந்துள்ளன.
ஆசிரியர் குறிப்பு:-
இந்த நந்திக்கலம்பகத்தை
இயற்றிய ஆசிரியர் ஊர், பெயர், குலம், முதலிய செய்திகள்
எதனையும் அறிய முடியவில்லை. இக்கலம்பகத்தால் அவரது கல்வித்திறமை
மட்டுமே நன்கு விளங்குகின்றது. அவரது செய்யுட்கள் நல்ல சந்த அமைப்போடும், பொருள் அமைதியோடும் உள்ளன.
கலம்பகத்தில் பாட்டுடைத் தலைவன் இறைவன் எனில் 100 பாடலும்
, அந்தணர் எனில் 95 பாடலும் , அரசர் எனில் 90 பாடலும் , அமைச்சர்
எனில் 70 பாடலும், வணிகர் எனில்
50 பாடலும், வேளாளர் எனில் 30 பாடலும் பாடுதல் மரபாகக் கையாளப்பட்டுள்ளது.
பாடல் எண் : 5
திணை – பாடாண்
துறை- பாடாண்பாட்டு; அஃதாவது ஓர் ஆண்மகனது புகழையும், ஆற்றலை யும், கொடையையும், அருளையும்
புகழ்ந்து பாடுதலாகும். இச்செய்யுள் நந்தி வர்மனது ஆற்றலையும், கொடையையும் புகழ்ந்து கூறிற்று.
பொருள் :-
தொண்டை நாட்டிற்கு அரசனும், சோழ நாட்டை உடையவனும், பழமை யான தன்மையுள்ள அலை வீசுகின்ற கடலையும் (முந்நீர்
, ஆற்றுநீர், ஊற்று நீர், மழைநீர் என்னும் மூன்று
நீரையுடைய கடல்] தன்னுடையதாகக் கொண்ட அரசர்க்கு அரசனுமாகியவன்
நந்தி மன்னன். அவனது வெற்றியை உடைய அரண்மனை வாயிலின் முற்றத்தே அவனை எதிர்த்த அரசர்களது
நாட்டையும் அவர்களது வீரமிக்க செல்வத்தையும் , எம்மன்னனை
நேரில் வந்து பார்த்து செல்லும் அரசர்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அவனது அழிவற்ற
கடுவாய் என்னும் பறை கூறும். அதாவது நந்தி, பகையரசரது நாட்டையும், செல்வத்தையும் கைப்பற்றித் தன்னை
வணங்கிய அரசர்க்குக் கொடுத்தான் என்பதே இப்பாடலின் பொருள் ஆகும்.
பாடல் எண் : 77
திணை : புறத்திணை (காஞ்சித்திணை)
துறை : மகள்மறுத்துரைத்தல்
[இது புறத்திணையுள்ளே காஞ்சியில் மகள்
மறுத்துரைத்தல் என்னும் துறையாகும்.]
பொருள் :
என் கையில்
இருப்பது அம்பு ஒன்று,
எனது வில்லோ முறிந்து போனது, அந்த வில்லின் கயிறோ
அறுந்து போனது, நானோ வயதானவன், அதனால் சோர்வு
அடைந்துள்ளேன் என்று எண்ணியோ உனது அரசர் மணம் பொருந்திய கூந்தலையுடைய எனது மகளை,
திருமணம் பேசி வரும்படி உன்னை அனுப்பினார். எனது
குடிசையிலே, குறுகிய காலும் நீண்ட வளை மரமும் , செம்பொன்னாலே
செய்யப்பட்ட மணிகள் பதித்த மாடங்களையுடைய தெள்ளாறு என்னும் இடத்திலே, நந்தி மன்னவனிடம் போர் தொடுத்த அவனது பாதத்தை அடையாத பகையரசரது யானையின் கொம்புகள்
அல்லவா!. என் குடிலினுள்ளே. அவற்றைச் சற்று குனிந்து பார்ப்பாயாக
என்று கூறினான்.
இது வீரனது மகளை விரும்பிய வேற்றரசன் அனுப்பிய தூதுவனைக் கண்டு
அவனுக்குத் தன் மகளைக் கொடுக்க மனமில்லாத வீரன், தனது வீரச்செயலைக்
கூறி, மகள்தர மாட்டேன் என மறுத்து, அத்
தூதுவனை அனுப்புதல் ஆகும்.
2. கலிங்கத்துப் பரணி
ஆசிரியர் குறிப்பு :-
கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் செயங்கொண்டார். இவருடைய ஊர், இயற் பெயர், பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, வரலாறு முதலிய செய்திகள் தெளிவாகத் தெரிய வில்லை. இவர்
முதல் குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகந்தவர், இவரைப்
பிற்காலத்துப் புலவரான பலப்பட்டடைச்சொக்கநாதர், “பரணிக் கோர்
சயங்கொண்டான்” எனச் சிறப்பித்துப் புகழ்ந்து பாடியுள்ளார்.
நூற்குறிப்பு :- உங்கள் செய்யுள் புத்தகத்தில்….
1.
பாடல் எண். 91
பாடலின் பொருள் :-
காடுபாடியது ; நீறு
பூத்த நெருப்பு
சுழன்று வீசிய சூறைக்காற்று, இறந்து போன உடலைச் சுட்டெரித்த சுடுகாட்டுச் சாம்பலைக் கிளறி அடித்தது.
அப்படிக் கிளறி அடித்த சாம்பல் அங்குக் கிடந்த மாணிக்கக் கற்களின் செந்நிறத்தை
மறைத்தது. அவ்வாறு செந்நிறம் மறைந்து கிடக்கும் மாணிக்கங்கள்,
புகையால் மூடப்பட்ட நெருப்பைப் போலவும், சாம்பலால் மூடப்பட்ட நெருப்பைப்
போலவும் தோன்றுகின்றன.
2.
பாடல் எண். 92
முத்துச் சொரிதல் - கண்ணீர் பொழிதல்
மண் வரைக்கும் ஓடியும்,
ஈரம் நீங்கியும், மிகவும் வறண்டும், நிலம் வெடிப்பு விட்டு காணப்படுகின்றது. அந்த இடங்களில் மூங்கில்களின் கணுக்கள்
வெடித்து முத்துக்களைச் சிதறும். அம்முத்துக்கள் மூங்கில் இரக்கப்பட்டு
இயல்பாக விடுகின்ற கண்ணீரைப் போன்று இருக்கும். அல்லது பாலை நிலத்தின்
வெப்பக் கொடுமையைக் கண்டோர் மனமுருகி விடுகின்ற கண்ணீர்த்துளிகளைப் போன்றிருக்கும்.
3.
பாடல் எண். 93
முத்துக்கள் -
கொப்புளங்கள்
கணுக்கள் வெடித்த முங்கில்களிலிருந்து முத்துக்கள்
வேகமாகத் தெறித்துப் பாலை நிலத்தில் விழுந்து கிடக்கும் . அவை,
பாலைநிலம் வருந்தி வெதும் பியமையால், அதன் உடம்பில்
தோன்றிய வியர்வைப் துளிகளைப் போன்று இருக்கும் ; அல்லது கொப்புளங்களைப்
போல இருக்கும் என பாலை நில வருணனையைப் புலவர் விளக்குகின்றார்.
4.
பாடல் எண். 94
காற்றின் தன்மை
நீர்
பரந்த கடல்கள்,
வலிமையான அலைகளாகிய கைகளைப் பலமுறை கரையிலே செலுத்துவதும், திக்கு யானைகளின் காதுகளிலிருந்து காற்று வீசுவதும், படர்ந்த கொடிய பாலை நிலத்திலிருந்து வீசிவரும், வெப்பம்
மிகுந்த காற்றுத் தம்மிடம் வாராமல் தடுத்துக் கொள்வதற்கேயாகும்.
5.
பாடல் எண். 95
வெந்தவனமே இந்தவனம்
வாள்படையுடைய முதற் குலோத்துங்க சோழன்
முன்னொரு சமயம் பாண்டியரோடு போரிடும்போது பாண்டியர் முட்களையுடைய வழிகளிலும்,
கற்களையுடைய வழிகளிலுமாக ஓடிப் போயினர் . அப்போது,
வெள்ளாறு என்னும் ஆறும் கோட்டாறும் என்னும் ஊரும் புகையால் மூடிக்கொண்டன.
அவற்றிற்கு அருகில் வெந்துபோன காவல்காடுகளின் வெப்பம் வேண்டு மானால்,
காளிதேவி உறைகின்ற இந்தப் பாலைவனத்தின் வெப்பத்தை ஒத்திருக்கும்.
6.
பாடல் எண். 96
மணலின் தன்மை
இலங்கை வேந்தன் இராவணனோடு போர் புரிவதற்கு
எழுந்த இராமனுடைய குரங்குக் கூட்டங்கள் அலை கடலை அடைப்பதற்கு இந்தப் பாலை நிலத்தினின்றும்
ஒரு மணல் காணப் பெறாமையால் மலைகளைப் பெயர்த்தெடுத்து வருத்தமுற்று கலங்கி நின்றன.
[ஒரு மணலை இட்டாலே அதன் வெப்பத்தால் கடல் முழுவதும் வற்றிவிடுமே; அதனை அறியாமையினாலே தான் அவை மலைகளைப் பெயர்த்துத் தளர்ந்து மயங்கின.]
முடிவுரை :-
இவ்வாறாக
கலிங்கத்துப்பரணியில் பாலைநில வெப்பத்தின் கொடுமையைப் புலவர் வருணிக்கின்றார்.
3. திருக்குற்றாலக் குறவஞ்சி
முன்னுரை:
திருக்குற்றாலக்குறவஞ்சியின்
ஆசிரியர் திருக்கூடராசப்பக் கவிராயர் ஆவர். இந்நூல் குறவஞ்சி நூல்களுல் தனித்தன்மை
வாய்ந்த ஒன்று.
நூற்குறிப்பு :- உங்கள் செய்யுள் புத்தகத்தில்….
பாடல் எண் : 1: மலைவளம் கூறுதல்
குறத்தி தலைவியிடம்
குறவர்கள் வாழும் திரிகூட மலை யாகிய திருக்குற்றால மலையின் வளங்களைக் கூறுகிறாள்.
வானுயர் தோற்றம்:-
1.
திரிகூடமலையில் தம் இனத்தோடு கூடிவாழும்
ஆண் குரங்குகள் அம்மலையில் விளையும் பலவகையான பழங்களைப் பறித்து வந்து தத்தம் பெண்
குரங்குகளுக்கு அன்புடன் கொடுத்து அவற்றோடு கொஞ்சி விளையாடும்.
2.
அப்பெண்குரங்குகள் சாப்பிட்டு எறிந்த
மிச்ச பழங்களைப் பெற தேவர்களும் ஏங்கி நிற்பர்.
3.
அம்மலையில் வாழும் வேடவர்கள் தம் பார்வையாலேயே
தேவர்களையும் தம்மிடம் வரும்படி அழைப்பர்.
4.
வான் வழியே செல்லும் ஆற்றல் படைத்த சித்தர்கள்
அம்மலையில் காய சித்திக்கான மூலிகைகளை விளைவிப்பார்கள்.
5.
தேனருவி போன்ற அருவியின் அலைகள் கரையைக்
கடந்து வான்வழியே தரையில் ஒழுகும் .
6.
அம்மலை மீதாக வானிற் செல்லும் சூரியனுடய
தேர் சக்கரமும் அதில் பூட்டப்பட்ட குதிரைகளின் கால்களும் வழுக்கிச் செல்லும் .
7.
கூனல் இளம் பிறையை அணிந்துள்ள சடை முடியை
உடைய சிவபெருமான் வீற்றிருக்கக் கூடிய திரிகூட மலை எங்கள் மலை என்று கூறுகிறாள் .
பாடல் எண் : 2
: குறவர் வாழ்க்கை:-
1.
திரிகூட மலை குறவர்க்குரிய மலையாகும்.
2.
அம்மலையில் ஒலிக்கும் அலைகளையுடைய அருவிகள், கழங்கு (கல்லாங்காய்) ஆடுவதுபோல் பெரும் முத்துக்களைத் தம் இருபுறங்களிலும்
வீசிச் செல்லும்.
3.
அந்த அலைகள் வீடுகளின் முற்றங்கள் தோறும்
ஓடிச்சென்று சிறு பெண்கள் விளையாடுவதற்காக கட்டிய சிறிய வீடுகளைச் சிதைத்துச் செல்லும்.
4.
அம்மலையில் வாழும் குறவர்கள் கிழங்குகளைத்
தோண்டி எடுத்தும்,
தேனடை களிலிருந்து தேனெடுத்தும், அம்மலையின் வளத்தைப்
புகழ்ந்து பாடி ஆடி மகிழ்வர்.
5.
யானையின் தந்தங்களை ஒடித்து அவற்றையே
உலக்கைகளாகக் கொண்டு காய்ந்த தினையை மாவாய் இடிப்பர்.
6.
அம்மலையில் பெரிய குரங்குகள் சுவைமிகுந்த
மாங்கனிகளையே பந்தாகக் கொண்டு விளையாடும்.
7.
ஓங்கி வளர்ந்துள்ள சண்பக மரங்களின் மலர்கள்
தேவலருகிலும் சென்று மலர்ந்து மணம் பரப்பும்.
8.
அடியார்களுக்கு வேண்டுவன வழங்கும் அருட்கொடையாளர், பேரரசர், குறும் பலா மரத்தடியில் எழுந்தருளியிருப்பர்.
9.
இவ்வளவு வளம்பெருகக் கூடிய மலையாகிய
திரிகூட மலை எங்கள் மலையே என்று கூறுகிறாள் .
பாடல் எண் : 3: காட்டின் வாசம்:
1.
திரிகூடமலையில் படமெடுத்தாடும் பாம்புகள் கக்கிய நாகரத்தினங்கள்
எங்கும் ஒளியைப் பரப்பும்.
2.
வான் வழியே செல்லும் நிலவினைத் தாம்
உண்ணும் கவளம் (உணவு உருண்டை) என்று கருதி, யானைகள் தம் துதிக்கையால்
அதனை வழிமறிக்கும்.
3.
வேடர்கள் தினையை விதைப்பதற்காகத் தீயால்
அழிக்கும் காடுகள் சிறந்த அகில், குங்குமம், சந்தனம் ஆகியவற்றின் மணம் பரப்பும்.
4.
மலையாடுகள் காடுகள் தோறும் குதித்தும்
பாய்ந்தும் ஓடும்.
5.
காகங்கள் பறந்து செல்லுதல் இல்லாத அம்மலையில்
மேகக்கூட்டங்கள் சென்று படிந்திருக்கும்.
6.
புகழ்பெற்ற குறும்பலா ஈசர்; கயிலாய கிரிவாசர் தங்கி
இருக்கக்கூடிய திரிகூட மலையெங்கள் மலையே என்று கூறுகிறாள்.
No comments:
Post a Comment